சங்கு சின்னத்தை முன்வைத்து பொதுச் சபையினர் ஆங்காங்கே அறம் பற்றி பேச முற்படுவதாகத் தெரிகின்றது. அவர்கள் அவ்வாறு பேசுவது சரியானதா – அதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு உண்டா? சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர். தேர்தல் என்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி பற்றியே சிந்திக்கும். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கு சின்னத்தை எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் நியாயத்தை கூறுகின்றனர்.
குறிப்பாக, பொதுச் சபையின் சார்பில் பங்கு கொண்டவர்கள் ஒற்றைச் சொல்லில் அதனை எடுக்க வேண்டாம் – கைவிடுங்கள் என்று அழுத்தமாகக் கூறவில்லை என்கின்றனர். மறுபுறம் பொதுச் சபையின் சார்பில் பொதுவெளிகளில் பேசுகின்றவர்களில் சிலர் தாங்கள் அவ்வாறு கூறவில்லை என்கின்றனர். இதில் எவர் கூறுவது சரி – எவர் கூறுவது தவறு என்பதற்கு அப்பால் சங்கு சின்னத்தை பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சியொன்று எடுத்ததை அறம் சார்ந்து விவாதிக்க முடியுமா? முதலாவது விடயம், பொதுச் சபைக்கும் ஏழு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டில் பொது வேட்பாளராக நிறுத்தப்படும் குறிப்பிட்ட நபருடன் பொருத்தமான உடன்பாடு செய்யப்படுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அந்த உடன்பாடு எங்கே? இதற்கு பொதுச் சபையினரால் பதிலளிக்க முடியாது. ஏனெனில், அவ்வாறானதோர் உடன்பாடு செய்யப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் பொதுச் சபையின் உடன்பாட்டை பொதுச் சபையே முறையாகக் கைக்கொள்ளவில்லை. பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பா. அரியநேத்திரன் இப்போது, கொள்கைரீதியாக பொதுவேட்பாளரை எதிர்ப்பதாகவும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதே சரியென்று முடிவெடுத்த தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றார். அறம் பற்றிப் பேசுவதாயின், அரியநேத்திரனின் தீர்மானம் அறம் சார்ந்ததா? எந்தக் கட்சிகள் அவருடன் பொது வேட்பாளர் விடயத்தில் உடன்பட்டு கைகோத்து பயணித்தனவோ அவர்களுக்கு எதிராகவே அரியநேத்திரன் பிரசாரம் செய்யப்போகின்றார்.
மட்டக்களப்பில் சங்கு சின்னத்தில் ஓர் அணியும் வீட்டுச் சின்னத்தில் இன்னொரு தரப்பும் மோதவுள்ள நிலையில், சங்குக்கு சங்கு ஊதப்போவதாக சூளுரைத்து அரியநேத்திரனுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்த சாணக்கியன் அணிக்கு ஆதரவாகவே அரியநேத்திரன் பிரசாரங்களை செய்யவுள்ளார். இந்த விடயத்தில் அறம் சார்ந்து அரிய நேத்திரனை பொதுச் சபையால் கட்டுப்படுத்த முடியுமா? அது முடியாது என்றால் மற்றவர்களின் அறம் பற்றிப் பேசுவதற்கு பொதுச் சபைக்கு என்ன தகுதியுண்டு? அவர் தனிப்பட்ட காரணங்களை கூறினாலும் இறுதியில் அவர் சாணக்கியன் அணியை பலப்படுத்தும் பணியையே செய்யப்போகின்றார்.
இந்தப் பின்புலத்தில் சங்குச் சின்னம் தொடர்பில் அறம் பற்றிப் பேசும் தகுதிநிலையை பொதுச் சபை முற்றிலும் இழந்துவிட்டது. பொதுச் சபையின் தவறு எங்கு ஆரம்பிக்கின்றது என்றால், பொதுச் சபை அரசியலை கையாளுவது தொடர்பில் அரைகுறையான பார்வையையே கொண்டிருந்திருக்கின்றது. மேலும் – விடயங்களின் பக்க விளைவுகளை ஆராயாமல் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்திருக்கின்றது. பொதுச் சபையை வழிநடத்தியவர்களில் சிலர் கருத்துருவாக்கிகள் – புத்திஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்தியிருந்த போதிலும்கூட, ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது அதன் பக்கவிளைவுகள் குறித்துத் தெளிவாக ஆராய்ந்தே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பொதுச் சபையின் அணுகுமுறை சிறுபிள்ளை வேளாண்மை போன்றே காணப்படுகின்றது. தூரநோக்கின்றி முன்னெடுக்கப்படும் பக்க விளைவுகளை ஆராயாமல் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அனைத்தும் இப்படித்தான் முடிவுறும். அரசியலை கையாளும் விடயத்தில் பொதுச் சபை தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை.