காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக, மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை தொடர்பில், விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த சிறைச்சாலைக்குள், வெளியில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுகின்றமை தொடர்பில், அவர் கண்டறிந்துள்ளார். இந்தநிலையில், அவ்வாறு வீசப்படும் பொதிகளில் இருந்து 13 கைப்பேசிகள் மற்றும் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த சிறைச்சாலை அதிகாரியின் அம்பலாங்கொடை பகுதியில் உள்ள தனிப்பட்ட வீட்டிற்கு முன்பாக, இனந்தெரியாத நபர் ஒருவரால் மலர் வளையமும், மெழுகுவர்த்தியும் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையாயத்தில் சிறைச்சாலை அதிகாரி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.இந்தநிலையில், அந்த சிறைச்சாலை அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.