சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால், கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேக நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, சந்தேக நபர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணியளவில், பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றார்.
சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.இதனால், சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.