சீன அரச சபை உறுப்பினர் ஷென் யிகின் – சபாநாயகருக்கு இடையில் சந்திப்பு

0
140

சீன அரச சபை உறுப்பினர் ஷென் யிகின் (Shen Yiqin) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கி சென் ஹொங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கிவரும் ஆதரவுகள் உள்ளிட்ட இலங்கை தொடர்பில் சீனா வழங்கும் அனைத்துவிதமான ஒத்துழைப்புகளுக்கும் சபாநாயகர் நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனாவின் ஒத்துழைப்பில் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிகராகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த சபாநாயகர், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அரச சபை உறுப்பினர் ஷென் யிகின் குறிப்பிடுகையில், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவது உள்ளிட்ட அவசர மனிதாபிமான தேவைகளுக்காக நிதியுதவியை வழங்குவதற்கு சீன அரசு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை விருத்தி செய்வதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிரயோக ரீதியான ஒத்துழைப்பு விருத்தியடைவதாகவும் அதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையில் உள்ள நெருக்கமான தொடர்பு மேலும் வலுவடைவதாகவும் ஷென் யிகின் தெரிவித்தார். விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதற்கு இலங்கையுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இலங்கையில் பெண்களின் மேம்பாட்டுக்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல சீனத் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்ததுடன் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.