நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை நவீன மயப்படுத்தாமல், நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஜேர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை’யை திறந்து வைத்த வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
‘முன்னர், எமது மருத்துவர்களுக்கு, மலேரியாவுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது.
ஆனால், தற்போது முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், பல்வேறு நோய்கள் ஏற்படுவதாலும், சுகாதாரத்துறையின் சவால்கள் அதிகரித்துள்ளன.
எனவே, சுகாதார சேவை அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
நாட்டின் கல்வி முறையும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும்.
இதுவரை, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மூலதனச் செலவு குறைவாகவே ஒதுக்கப்பட்டது.
முன்னர் சுகாதாரம் மற்றும் கல்விக்கு போதுமான பணம் செலவிடப்படவில்லை.
யுத்தத்திற்கு பெருமளவு பணம் ஒதுக்க வேண்டியேற்பட்டதே அதற்குக் காரணம்.
எந்தக் காரணத்திற்காகவும் இனி பணம் அச்சிட முடியாது.
அரசு வங்கிகளில் பணம் பெற முடியாது.
நாட்டிற்குள் இருந்து தேவையான வருமானத்தை ஈட்டிக்கொண்டு, முன்னேற வேண்டும்.
எமக்கிருந்த ஒரே வழி வரியை உயர்த்துவதுதான்.
இதற்காக அனைவரும் எங்களைக் குற்றம் சாட்டினார்கள்.
ஆனால் இந்த நடவடிக்கையால், முதல் முறையாக வரவு செலவுத்திட்டத்திற்காக, பணத்தை அச்சிட வேண்டிய தேவை ஏற்படவில்லை.
அனைவரும் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் அறிவோம்.
ஆனால் வரி அதிகரிப்பால், இன்று வரவு செலவுத் திட்டத்திற்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.
அதன் பெறுபேறுகளை இன்று நாட்டில் காண முடிகிறது.
டொலருக்கு நிகராக 370 ரூபாவாக இருந்த ரூபாயின் பெறுமதி, தற்போது 300 ற்கும் குறைவாக சரிந்து, ரூபா வலுப்பெற்றுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் ரூபா வலுவடையும்.
பண வீக்கம் குறைவதால், வட்டி வீதத்தைக் குறைக்க முடியும்.
அப்போது தொழிற்துறைகள் முன்னேற்றமடையும்.
தொழிற்துறை வளர்ச்சியால் நாடு முன்னேற்றமடையும்.
கஷ்டமாக இருந்தாலும், எடுத்த தீர்மானங்களால் நாடு இன்று பலனடைந்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்.
இதனுடன் தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்தால், அடுத்த 2 வருடங்களில், நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை படிப்படியாக குறையும்.
அந்த பணத்தை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தலாம்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனமயப்படுத்தாமல், எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது.
1930களில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், நாம் முன்னேறினோம்.
1980களில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் நாங்கள் முன்னேறினோம்.
இன்று இலங்கையில் மாத்திரமன்றி, ஐக்கிய இராச்சியத்திலும் எமது மருத்துவத் துறையினரால், சுகாதார முறைமை இயங்கி வருகின்றது.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான பணத்தை நாமே உருவாக்கி, அந்த துறைகளில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும், காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட, ‘ஜேர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை, இன்று, மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஆறு மாடிகளைக் கொண்ட வைத்தியசாலை, 640 கட்டில்கள், 6 அறுவை சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், விசேட குழந்தை பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.
அத்துடன், கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து, ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த, ஜேர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்மட் கோல், சுனாமி அனர்த்தத்தினால், தென் மாகாணத்தில், மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான, காலி மகமோதர வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்த்து, புதிய மகப்பேற்று வைத்தியசாலையை அமைக்க முன்வந்தார்.
வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக, ஜேர்மன் அரசாங்கம் 25 மில்லியன் யூரோக்களை வழங்கியிருந்தது.
வைத்தியசாலைக்கான செலவுகளில் ஒரு பகுதி நன்கொடையாகவும், மற்றைய பகுதி இலகுக் கடனாகவும் கிடைத்துள்ளது.
ஜேர்மன் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைக்காக, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கு, ஜனாதிபதி, நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.
வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக, ஆரம்பத்தில் 800 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டது.
பின்னர், மேலும் இரண்டு காணிகள் கையகப்படுத்தப்பட்டு, தற்போது வைத்தியசாலையின் மொத்த பரப்பளவு, சுமார் ஆயிரம் பேர்சஸ்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், தென் மாகாண ஆளுநர் விலி கமகே, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஹெல்மட் கோல் காலி மகப்பேற்று வைத்தியசாலை பதில் தலைவர் ஜகன் வீரத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.