29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை

சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட குறைந்த செலவுடன், 75 ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை வண்ணமயமாக கொண்டாடும் வகையில் அன்றைய தினம், காலிமுகத்திடலில் பல்வேறு கலாசார அம்சங்களுடன் தேசிய நிகழ்வை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு, நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் கலாசார அம்சங்கள் மற்றும் இளைஞர்களின் நிகழ்ச்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
09 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலை, கலாசார மற்றும் சமய நிகழ்ச்சிகளை அந்தந்த மாகாணங்களின் அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து நடத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பாடசாலை மாணவர்களை முதன்மையாகக் கொண்டு கல்வி அமைச்சினால் போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இளைஞர்களுக்காக மாகாண மட்டத்தில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவித்தார்.
பொதுமக்கள் கலந்து மகிழும் வகையில் இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அர்த்தமுள்ள வகையில் ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சுதந்திர தின நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாகாணங்களிலுமுள்ள பிரதான அரசாங்க அரங்குகள், திரையரங்குகள் மற்றும் கொழும்பு தாமரைத்தடாக அரங்கு, டவர் மண்டபம், எல்பின்ஸ்டன் மற்றும் ஜோன் டி சில்வா அரங்கு என்பவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு சலுகை விலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
சுதந்திர தினத்துடன் இணைந்ததாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
கலைஞர்களுக்காக கொட்டாவ பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்று நிர்மாணப்படும். இந்த வீடுகளை அரசியல் தொடர்புகள் அல்லது சிபாரிசுகள் பேரில் வழங்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னுரிமை மற்றும் சரியான தேவையின் அடிப்படையில் மாத்திரம் இந்த வீடுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பொறிமுறையொன்றை உடனடியாக தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பல்வேறு கருப்பொருள்களின் கீழ் கண்காட்சிகளை நடாத்துவதற்கும், தேவேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரையில் கண்காட்சி சைக்கிள் சவாரி ஒன்றை நடத்துவதற்கும் ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவின் மேற்பார்வையில், ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் உப குழுக்களை நியமிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles