பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடுத்ததாக கவனத்தை ஈர்த்த நிகழ்வு என்றால் அது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனின் தோல்வியேயாகும்.
தமிழ் அரசுக் கட்சியே இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் இயக்கம் என்பதால் அவர்கள் வழமைபோன்று தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் சுமந்திரன் தனது வெற்றியில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனால் தோல்வியை தவிர்க்க முடியாத அளவுக்கு நிலைவரங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கணிசமான காலமாக ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமல்ல, தமிழ் அரசு கட்சிக்குள் பலரும் கூட சுமந்திரனுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்திவந்தனர் என்பது சகலருக்கும் தெரியும்.
தமிழ்க் கட்சிகளுக்கு வேறு விடயங்களில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் சுமந்திரனுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவை ஒருமித்துநின்றன. தாங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகாவிட்டாலும் பரவாயில்லை, சுமந்திரன் தேர்தலில் தோற்றால் அதுவே தங்களுக்கு பெரிய வெற்றியாக இருக்கும் என்ற தோரணையில் பல தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் செயல்களும் அமைந்திருந்தன என்பது ஒன்றும் இரகசியமானது இல்லை. வடக்கில் இருந்து புதிய பாராளுமன்றத்துக்கு செல்பவர்களில் சுமந்திரனுக்கு இணையான பங்களிப்பைச் செய்யக்கூடியவர் என்றால் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே.
ஆனால், அவரின் கோட்பாட்டுப் பிடிவாதம் பாராளுமன்ற விவகாரங்களில் பரவலான விவகாரங்களில் அவர் பங்களிப்புச் செய்வதற்கு இடையூறாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. கோட்பாட்டு உறுதியுடனான ‘சமகாலத்தில் நடைமுறைச் சாத்தியமில்லாத’ சில அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தால் மாத்திரமே கொழும்பு அரசாங்கத்துடன் அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்ற பொன்னம்பலத்தின் நிலைப்பாட்டு தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்புடையதாக இருக்காது. இந்த இடத்தில்தான் சுமந்திரனின் தேவையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைச் சமரசம் செய்யாமல் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துடன் சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தென்னிலங்கையுடனும் சர்வதேச சமூகத்துடனும் ஊடாட்டங்களைச் செய்வதில் மிகவும் இராஜதந்திரமான அணுகுமுறை ஒன்றை சுமந்திரன் கடைப்பிடித்து வந்திருக்கிறார். அவரின் தோல்வியை இன்றைய தமிழர் அரசியலுக்கு ஒரு பின்னடைவு என்று நிதானமாகச் சிந்திக்கும சிங்கள அரசியல்வாதிகளில் பலரும் கூட உணருகிறார்கள். சுமந்திரனின் இந்த அணுகுமுறை அவருக்கு ஆதரவாளர்களையும் எதிரிகளையும் சமஅளவில் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
தேர்தல் தோல்விக்கு பின்னரும்கூட தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கும் சுமந்திரன் புதிய அரசியல் சூழ்நிலையில் தனது பங்களிப்பு குறித்து தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார். ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கையுடன் நடுவில் நின்றுபோன புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை நிறைவுசெய்யப் போவதாக ஜனாதிபதி திஸநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அந்த செயன்முறைகளில் பயனுறுதியுடைய துடிப்பான பங்களிப்பைச் செய்த சுமந்திரன் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் தனது நிபுணத்துவத்தையும் சேவையையும் வழங்க முடியும். புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படும் போது சுமந்திரன் நிச்சயமாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வகிபாகத்தைக் கொண்டிருக்க முடியும் என்று ‘ஈழநாடு’ உறுதியாக நம்புகிறது.