யாழ்ப்பாணம் – சுழிபுரம் திருவடி நிலையில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி பொது மக்களின் எதிர்ப்பால், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருவடி நிலையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமிற்கு பொதுமக்களின் காணிகளை சவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு, காணி அளவீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

எதிர்ப்பையடுத்து, அங்கு காணி அளவீடு செய்வதற்கு வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தினர் காணி அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
