ஜனாதிபதி எதிர்பார்ப்பதைப் போன்று நவீன இலங்கையை உருவாக்க முடியாது – ராஜித சேனாரத்ன

0
108

புதிய பயங்கரவாத எதிர்பு சட்ட மூலம், ஏற்கனவே காணப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை விட மோசமானதல்ல.

எவ்வாறிருப்பினும் புதிய சட்ட மூலத்தில் காணப்படும் கடுமையான ஏற்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் வன்முறைகள் , இனக்கலவரங்கள் ஏற்பட்ட போது அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தியே அப்போதைய தலைவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அன்று பயங்கரவாதத் தடைசட்டம் காணப்படவில்லை. அத்தோடு இந்த சட்டம் நடைமுறையில் இருந்த போதிலும் , வடக்கில் 30 ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது.

பயங்கரவாத எதிர்பு சட்டத்தைக் கொண்டுள்ள நாடுகள் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அதனை நடைமுறைப்படுத்துகின்றன.

ஆனால் இலங்கைக்கு அவ்வாறு சர்வதேச அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை. புதிய பயங்கரவாதத் தடைசட்டம் முன்னர் காணப்பட்ட பயங்கரவாதத் தடை சட்டத்தை விட மோசமானதல்ல என்ற போதிலும், அதுவும் சிறந்ததல்ல என்பதே எனது நிலைப்பாடாகும்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை விட ஓரளவு இலகுவான ஏற்பாடுகள் புதிய சட்டத்தில் காணப்படுகிறது.  எனினும் இதில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ள கடுமையான ஏற்பாடுகளை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

இவை நீக்கப்படாவிட்டால் ஜனாதிபதி எதிர்பார்ப்பதைப் போன்று நவீன இலங்கையை உருவாக்க முடியாது என்றார்.