ஜப்பான் தேசிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை வளர்ந்துவரும் அணி வெற்றிபெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்பான் அணிக்கு இந்தப் போட்டியில் கெண்டல் கடோவாக்கி பிளெமிங் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவர் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க மறுமுனையில் சுபுன் நவரத்ன 14 ஓட்டங்களை பெற்றார்.
இவர்கள் இருவரும் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறத் தவறியிருந்தனர். எனவே 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஹர்ஷன விக்ரமசிங்க மற்றும் டெலோன் பீரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை வளர்ந்துவரும் அணி ஆரம்பத்தில் தடுமாறி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் செஹான் பெர்னாண்டோ 24 ஓட்டங்கள், சகுன லியனகே 26 ஓட்டங்கள் மற்றும் டெலோன் பீரிஸ் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இந்த பிரகாசிப்புகளின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் கொஹீ குபோடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எனவே ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரை இலங்கை அணி 3-0 என கைப்பற்றியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெறவுள்ளது