தற்போதைய AI கருவிகளால் எந்தவொரு வெளியீட்டையும் குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக மீளுருவாக்கவும், சிதைக்கவும் முடியும். இது பகிரப்பட்ட வெளியீடுகளின் மீதான நம்பிக்கையற்ற கண்ணோட்டத்தை மேலும் வலுவூட்டுகின்றது. தாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது திரிபுபடுத்தப்பட்ட AI சார்ந்த மறுவுருவாக்கம் அல்ல என்பதை பார்வையாளர்கள் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வார்கள்?
வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு பிரிவான வெரிட்டே மீடியா, ‘ட்ரேஸ்-இட்’ (Trace-it) எனப்படும் ஓர் எளிமையான QR குறியீடு அடிப்படையிலான வெளியீட்டுமுறையை முன்னெடுத்துள்ளது. ஒரு டிஜிட்டல் கைரேகையாக விளங்கும் இது, குறிப்பிட்ட வெளியீட்டின் உண்மையான மூலாதாரத்தை அணுகுவதற்கு வழிவகுப்பதோடு அதன் நம்பகத்தன்மையை உடனடியாக சரிபார்ப்பதற்கு ஊடக பயனர்களுக்கு உதவுகிறது).
நம்பிக்கைக்குரிய வெளியீட்டாளர்கள் இந்த முறையை ஒரு வெளியீட்டுத்தரமாக ஏற்றுக் கொள்ளும் போது, அனைத்து நம்பகமான டிஜிட்டல் முறையிலான உள்ளடக்கங்கள் / வெளியீடுகளின் உண்மையான வெளியீட்டாளர்களை அணுகுவதற்கு ஏதுவாக அமைவதோடு, திரிபுபடுத்தப்பட்ட வெளியீடுகளின் பரவல் கண்டறியப்பட்டு குறைக்கப்படும் என வெரிட்டே மீடியா குழுவின் தலைவர் தீபாஞ்சலி அபேவர்தன விளக்கியுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல், வெரிட்டே ரிசர்ச் மூலம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் உருவகப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து வெளியீடுகளிலும் ‘டிரேஸ்-இட்’ QR குறியீட்டின் டிஜிட்டல் கைரேகை காணப்படும்.
இந்தப் பொதுப்படுத்தப்பட்ட ‘டிரேஸ்-இட்’ தரநிலையை ஏற்றுக்கொண்டு பயன்பெறுமாறு அனைத்து நம்பிக்கைக்குரிய வெளியீட்டாளர்களையும் வெரிட்டே மீடியா ஊக்குவிக்கிறது. இந்த எளிய அங்கீகார முறையை செயற்படுத்துவது தொடர்பில் உதவிகோரும் நம்பகமான வெளியீட்டாளர்களுக்கு உதவதயாராக உள்ளதாக, வெரிட்டே மீடியா குழுவின் செயற்திட்டத் தலைவர் றொஷல் கனக சபை உறுதிப்படுத்தியுள்ளார்.

பதிப்பாளரின் உண்மையான வெளியீட்டுப் பக்கங்களைக் கண்டறிய முடியாத வெளியீடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் ஊடகப் பயனர்களை வெரிட்டே மீடியா கேட்டுக்கொள்கிறது. ஏனெனில் அவ்வாறான வெளியீடுகள் பெரும்பாலும் திரிபுபடுத்தப்பட்டவையாகவோ அல்லது போலியானவையாகவோ இருப்பதற்கான அதிகவாய்ப்புகள் உள்ளன. அத்தகைய வெளியீடுகளை பகிர்வது போன்ற ஆரோக்கியமற்ற நடத்தைகளைத் தவிர்க்குமாறு ஊடகப்பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
‘டிரேஸ்-இட்’ என்பது வெரிட்டே மீடியாவின் பொறுப்புடன் கூடிய பகிர்வு மற்றும் தகவல் சரிபார்ப்பை ஊக்குவிப்பதற்கான பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். வெரிட்டே மீடியா என்பது, உலகை மறுவடிவமைக்கும் வகையில் அறிவுசார் கண்ணோட்டத்துடன் பல்துறை அடிப்படையில் இலங்கையை தளமாகக்கொண்டுள்ள ஒரு சிந்தனைக்குழுவான வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு பிரிவாகும்.