27.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றாலும் அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஒன்றாம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மேலும் 13 மீனவர்களை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த கைது நிகழ்வு நடந்திருக்கிறது.

மீன்பிடித்தடைக் காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 169 விசைபடகுகளை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை நம்பியுள்ள மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலை அளிக்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் முடிவில்லாமல் தொடரக்கூடாது. இந்திய – இலங்கை அதிகாரிகள், தமிழக – இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles