எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து, ஓரணியில், இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தன.
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்றன. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வடக்கு கிழக்கில், திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடும் நிலையில்,திருகோணமலை மாவட்டத்தில், இலங்கைத்
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து, வீட்டுச் சின்னத்தின் கீழ், போட்டியிடுகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலை மாவட்டம் தவிர்ந்து, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் கூட்டணி அமைக்காது தனித்துப் போட்டியிடுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், திருகோணமலை மறைமாவட்ட ஆயரின் முயற்சிக்கு இணங்க, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன ஓரணியில் களமிறங்கியுள்ளன.