ஒரு காலத்தில் பல ஆயுத விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றன. ஆங்கில எழுத்துகளை முன்னாலும் பின்னாலும் போட்டுவிட்டால் அவைகள் எல்லாம் இயக்கங்கள் என்று நகைச்சுவையாகப் பேசுமளவுக்கு இயக்கங்களின் எண்ணிக்கை மேலோங்கியிருந்தது. பின்னர், அனைத்தும் உதிர்ந்து ஐந்து பிரதான இயக்கங்களே நிலைபெற்றன. அவையும்போய் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே இறுதிவரையில் போராட்டத்தை முன்னெடுத்தது. அதுவும் போனது. இன்று அந்த இடத்தை ஜனநாயகம் பேசும் நபர்கள் கையிலெடுத்திருக்கின்றனர்.
2010இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இருந்தது. கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆசனப் பங்கீடு தொடர்பான பிரச்சனையில் வெளியேறியது. ஒன்று இரண்டானது. பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியேறிது. இடைப்பட்ட காலத்தில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளுக்குள் இருக்கின்றதா அல்லது வெளியில் இருக்கின்றதா என்பது தெரியாதளவுக்கு நிலைமைகள் இருந்தன. கூட்டமைப்பில் அரசியலை ஆரம்பித்த விக்னேஸ்வரன் பின்னர் ஒரு கட்சியாக முகம் காட்டினார். ரெலோவிலிருந்து சிறீகாந்தா அணியொன்று தெரிந்தது. அனந்தி சசிதரன் இன்னொரு கட்சியென்றார்.
மணவண்ணனும் இன்னொரு கட்சியென்றார். இது போதாதென்று இப்போது ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியென்று இன்னோர் அணி உருவாகியிருக்கின்றது. அடுத்த மாகாண சபைக்கு விக்னேஸ்வரனின் பக்கத்திலிருந்தும் இன்னோர் அணி வரலாம். தமிழ் அரசு முற்றிலுமாக சுமந்திரனிடம் சென்றால் சிறீதரனும் இன்னோர் அணியை ஆரம்பிக்கலாம். ஆரம்பகாலத்து இயக்கங்களை நினைவுபடுத்துவதுபோல் கட்சிகள் உருவாகின்றன. ஆனால், இவ்வாறு தங்களை கட்சியாக்கிக் கொண்டிருப்பவர்களை சற்று உற்றுப் பார்த்தால், அவர்களிடம் ஆகக்குறைந்தது மூன்று பேர்கூட இருக்காது.
மூன்று பேரைக் கொண்டு கட்சி ஆரம்பிக்க முடியுமென்றால் வடக்கு, கிழக்கில் எத்தனை கட்சிகளை உருவாக்க முடியும்? இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு, கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனங்களில் ஒன்றைக் கைப்பற்ற எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன? இவர்கள் சாதிக்கப் போவது என்ன என்பதற்கான பதில் அவர்களிடமாவது இருக்கின்றதா என்பதுதான் கேள்வி? பல இயக்கங்கள் தோன்றி இறுதியில் சிலவாகி, ஒன்றாகி இறுதியில் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லாது போனதுபோல், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் தங்களுக்குள் பிளவுற்று – மோதி இறுதியில் தமிழ் மக்களுக்கு எதைப்பெற்றுக் கொடுக்கப் போகின்றன? தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் பலவீனமடைந்து செல்லும்.
தமிழ்ப் பிரதிநிதித்துவங்களே தமிழ்த் தேசிய அரசியலின் ஒரே பலமாகும். இந்தப் பலத்தையும் இழந்துபோனால் தமிழர் அரசியல் என்பது வெறும் சொல்லாகவே மிஞ்சிப் போகும் ஆபத்து நேரிடும். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் பல கட்சிகளுக்கும் பாடங்களை புகட்டவுள்ளது. வரலாறு முழுவதும் தமிழர் அரசியல் தரப்புகளுக்கு போதிய பாடங்கள் கிடைத்தபோதிலும்கூட எதனையும் கற்றுகொள்ள மாட்டோம் என்பதில் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் உறுதியாக இருக்கின்றனரா?