இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.