கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று சனிக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள அதிகாரியும் வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதிக்கு வருகை தந்திருந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது அங்கிருந்த நபரொருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியால் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த இருவரை உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.