“தங்க முட்டையிடும் வாத்து” என்பது ஒரு பிரபலமான நீதிக்கதை ஆகும், இதில் ஒரு வாத்து தினமும் தங்க முட்டை இடும். அதை விற்று அந்த மனிதன் பணக்காரனாகிறான். அவனுக்கு பேராசை வந்து, வாத்தின் வயிற்றில் எல்லா முட்டைகளையும் ஒரே நேரத்தில் எடுக்க முயற்சி செய்து, அதனால் வாத்தை கொன்றுவிடுகிறான். இறுதியில், அவனுக்கு தங்க முட்டைகள் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது.
அவ்வாறான சம்பவமொன்றே மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலமுனை கூட்டுறவு சங்கத்திற்கு முன்பாக உள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் கோழி ஒன்று தினமும் இரண்டு முட்டைகளை இட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்திலிருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட சிவப்பு நிறக் கோழியே 6 நாட்களும் 12 முட்டைகளை தொடர்ச்சியாக இட்டுள்ளது.
அவ்வாறான கோழியை, அந்த கடையின் உரிமையாளர் தாளங்குடவை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அவர், கோழியை வாங்கிச் சென்று கழுத்தை அறுத்து குடல்களை வெளியே எடுத்தபோது, அதன் வயிற்றுக்குள்ளும் இரண்டு முட்டைகள் இருந்துள்ளன என கடையின் உரிமையாளர் முகமது அஸ்மான் தெரிவிக்கிறார்
மிக நீண்ட நாட்களாக கோழி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தான் ஒவ்வொரு நாளும் இரண்டு முட்டைகளை இடும் கோழியை முதன்முறையாக கண்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
