26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தெற்காசிய மகளிர் கால்பந்தாட்டம்

ஆண்களை ஒத்த தோற்றங்களுடன் ஆற்றல்களை வெளிப்படுத்திய வீராங்கனைகளைக் கொண்ட நேபாளத்திற்கு எதிராக வியாழக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்பயின்ஷிப் பி குழு போட்டியில் கடுமையாக போட்டியிட்ட இலங்கை 0 – 6 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தது.

தெற்காசிய மகளிர் சம்பியன்ஷிப் ஆரம்பமாவதற்கு முன்னர் 40 தினங்கள் மாத்திரமே வதிவிட பயிற்சிகளில் ஈடுபட்ட இலங்கை மகளிர் அணியினர் ஆசியாவிலும் பிரான்ஸிலும் கழக மட்ட தொழில்முறை கால்பந்தாட்டம் விளையாடிவரும் நேபாள அணியினரை 6 கோல்களுக்கு மட்டுப்படுத்தியமை பாராட்டுக்குரியதாகும்.

போட்டியின் முதல் 13 நிமிடங்களுக்குள் நேபாளம் 3 கோல்களைப் போட்டதுடன் இடைவேளையின்போது 4 – 0 என முன்னிலை அடைந்ததால் இலங்கை வீராங்கனைகள் ஆட்டம் கண்டனர்.

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து ரேணுகா நாகர்கோட் தாழ்வாக பரிமாறிய பந்தை சபித்தா ராணா மகார் கோலாக்கி நேபாளத்தை 1 – 0 என முன்னிலையில் இட்டார்.

நான்கு நிமிடங்கள் கழித்து பி.கே. பிமாலாவிடம் இருந்து பந்தைப் பெற்றக்கொண்ட சபித்ரா பண்டாரி பந்தை சற்று முன்னால் நகர்த்தி வலது காலால் ஓங்கி உதைத்து நேபாளத்தின் 2ஆவது கொலை புகுத்தினார்.

பிரான்ஸ் தேசத்தில் குயிங்காம்ப் கால்பந்தாட்டக் கழகத்தில் தொழில்முறை வீராங்கனையாக 27 வயதான பண்டாரி விளையாடி வருகிறார். இரண்டாவது கோல் போடப்பட்ட அடுத்த நிமிடத்தில் நேபாளத்தின் கோல் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இடது புறத்திலிருந்து அமிஷா கார்க்கி உயர்த்தி பரிமாறிய பந்தை ரேக்கா பூடெல் மிகவும் அலாதியாக ‘வொலி’ முறையில் கோலினுள் புகுத்தினார்.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லையிலிருந்து சபித்ரா பண்டாரி இடதுகால் கோலை நோக்கி உதைத்த பந்தை கோல்காப்புக்கு எதிர்த்திசையைப் பார்த்தவாறு ரெக்கா பூடேல் தனது வலது பின்னங்காலால் கோலினுள் புகுத்த அரங்கில் குழுமியிருந்த சுமார் 10,000 நேபாள இரசிகர்கள் ஆரவாரம் செய்து தமது அணி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 2ஆவது நிமிடத்தில் சாரு லிம்புவின் குறுந்தூரபரிமாற்றம் மூலம் பந்தைப் பெற்றுக்கொண்ட சபித்தா ராணா மகார், இடதுபுறத்திலிருந்து உயர்வாக கோலை நோக்கி செலுத்தினார்.

பந்தை நோக்கி மிக நேர்த்தியாகத் தாவிய அமிஷா கார்க்கி தனது தலையால் முட்டி அணியின் 5ஆவது கோலைப் போட்டார். ஆனால், அதன் பின்னர் இலங்கை அணியினர் விவேகத்துடன் விளையாடினர். போட்டியின் ஆரம்பத்திலிருந்து இலங்கை வீராங்கனைகள் விவேகத்துடன் விளையாடியிருந்தால் நேபாளத்தை முதலாவது பகுதியில் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் உபாதையீடு நேரம் ஆரம்பிக்கும் வரை 38 நிமிடங்களுக்கு நேபாள வீராங்கனைகளுக்கு கோல் போட இலங்கை வீராங்கனைகள் அவகாசம் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் கோல் காப்பாளர் இஷன்கா அயோமி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு நேபாள வீராங்கனைகளின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.

பின்கள வீராங்கனைகளும் துணிச்சலுடன் விளையாடி நேபாளத்தின் முயற்சிகளை முறியடித்தனர். எனினும் உபாதையீடு நேரத்தில் (90 + 4 நி.) அனித்தா பஸ்னெட்டின் மிகவும் சாதுரியமான கோர்ணர் கிக் பந்தை மாற்று வீராங்கனை ரஷ்மி குமார் கய்சிங் தலையால் முட்டி கோல் போட்டார்.

இந்த கோலின் உதவியுடன் பி குழுவில் நிகர கோல்கள் அடிப்படையில் நேபாளம் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்றது. ஒட்டுமொத்தத்தில் இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை வீராங்கனைகளின் ஆற்றல்கள் திருப்தி தரும் வகையில் அமைந்திருந்தது.

இந்த வீராங்கனைகளுக்கு பயிற்சிகளும் உள்ளூர் போட்டி அனுபவங்களும் தொடர்சியாக கிடைத்தால் அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் அவர்களது முன்னேற்றத்தை காணக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்த பயிற்றநரும் முன்னாள் தேசிய வீரருமான மொஹமத் ஹசன் றூமி, தெற்காசிய மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கையின் பெறுபேறுகள் திருப்தி தருவதாகவும் குறிப்பிட்டார்.

மாலைதீவுகளை ப்ரவீனா மாதுக்கி பெரேராவின் கோல் மூலம் வெற்றிகொண்ட இலங்கை, இரண்டாவது போட்டியில் பூட்டானிடம் 1 – 4 என தோல்வி அடைந்தது. அப் போட்டியில் அணித் தலைவி துஷானி மதுஷிக்கா கோல் போட்டிருந்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles