மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அரகலய செயற்பாட்டாளர்களால் ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபராக மன்றில் முன்னிலையாகுமாறு தென்னகோனுக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இன்று தீர்மானத்தை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணம் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், குறித்த பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். .
இதன்படி, இந்த தனிப்பட்ட முறைப்பாட்டைப் பேண முடியாது எனத் தெரிவித்து நீதவான் வழங்கிய அழைப்பாணை செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதியரசர்கள் ஆயம் அறிவித்தது.
இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்பில் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிப்பேராணையை பிறப்பித்தது.
காலி முகத்திடல் போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கான போதிய ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மற்றுமொரு நீதிப்பேராணையை பிறப்பித்துள்ளது.