தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான தேசிய பேரவையில் அங்கம் வகிக்கப்போவதில்லை என எதிரணியிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. தேசிய பேரவையின் முதலாவது கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே, குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டணி, டலஸ் அணி என்பனவே தமது தரப்பில் எந்தவொரு உறுப்பினரும் தேசிய பேரவையில் இடம்பெறமாட்டார்கள் என அறிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர், எதிரணி பிரதம கொறடா ஆகியோர் தேசிய பேரவையில் பதவி நிலை உறுப்பினர்களாவர். எனினும், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று அறிவித்தார். இதே நிலைப்பாட்டில்தான் எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவும் உள்ளார். அத்துடன், பாராளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்படாவிட்டால், தேசிய பேரவையை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் எனவும் இடித்துரைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைத்துள்ள மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் பெயர்களும் தேசிய பேரவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விமல் வீரவன்ஸ தலைமையிலான உத்தர லங்கா சபாகயவில் அங்கம் வகிக்கும் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, அத்துரலிய ரத்ன தேரர், திஸ்ஸ விதாரண ஆகியோரின் பெயர்களும், தேசிய பேரவையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய பேரவைக்கான உறுப்பினர்கள் கடந்த 23 ஆம் திகதி சபாநாயகரால் பெயரிடப்பட்டனர். தேசிய பேரவையில் இடம்பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ள நிலையில், தமது அனுமதியின்றியே பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.