தைவானின் பொருளாதார மற்றும் கலாசார மைய அலுவலகமொன்று, இந்தியாவின் மும்பை நகரில் திறக்கப்பட்ட நிலையில், தைவான் விவகாரத்தை இந்தியா கவனமாகக் கையாள வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.
தைவான் 1949ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்தாலும், தைவானை தமது ஆட்சிப் பகுதியாகவே சீனா கையாண்டு வருகின்றது. சீனாவின் நடவடிக்கைகளுக்கு தைவானில் கடுமையான எதிர்ப்புக்களும் காணப்படுகின்றன.
ஆனாலும், தைவானுடன் வேறு நாடுகள் அதிகாரபூர்வ உறவுகளைப் பேணுவதற்கு, சீனா, எதிர்ப்புக் காட்டி வருகின்றது.
இந்நிலையில், தைவானின் பொருளாதார மற்றும் கலாசார மைய அலுவலகம், புதுடெல்லி மற்றும் சென்னையில் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், அண்மையில் மும்பையிலும் திறக்கப்பட்டது.
இது தொடர்பில், சீனாவின் வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் மாவோ நிங், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில், ‘உலகில் ஒரே சீனாதான் உள்ளது. அந்த சீனாவின் அங்கமாக தைவான் உள்ளது. சீனாவுடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். தைவான் விவகாரத்தை இந்தியா விவேகமாகவும், எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும்.
அலுவலக ரீதியாக தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகின்றோம். இது தொடர்பில் இந்தியத் தரப்புக்கு எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம்’ என உள்ளது.