காலி, நாகொடை பத்தேகம பிரதேசத்தில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலம் நேற்று வியாழக்கிழமை (21) திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பிட்டியாகொட பம்பேதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்றைய தினம் இரும்புப் பாலத்தில் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதன்போது பாலத்தில் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர் பாலத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நாகொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.