நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் – உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

0
10

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில்  விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.

நுவரெலியாவில் பிரதான வீதிகளை  ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை  பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம்  பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.

அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில்  விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள்  பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார்.

நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில்  வழுக்குதன்மையும்  அதிகரித்து  விபத்துகளும்  ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில்  திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.

மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர்.  மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில்  அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக  விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன.

விபத்தில் இறப்பு  வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக  திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில்  சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.