ஜனாதிபதி தேர்தல் நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் 347,646 வாக்காளர்களும் கொத்மலை தொகுதியில் 88,219 வாக்காளர்களும் ஹங்குராங்கெத்த தொகுதியில் 78,437 வாக்காளர்களும் வலப்பனை தொகுதியில் 90,990 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், தபால் மூலம் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 19,748 ஆகும்.52 வாக்கெண்ணும் நிலையங்கள் நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 வாக்கெண்ணும் நிலையங்கள் நுவரெலியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய 11 வாக்கெண்ணும் நிலையங்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களில் 8500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார் என 1,748 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.நுவரெலியா மாவட்ட தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு 36 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்தார்.