நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் 108 பாண லிங்கங்கள் பிரதிஷ்டை!

0
34

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் 108 பாண லிங்கங்கள் பிரதிஷ்டை முன்னிட்டு பாண லிங்கங்களும் புனித நதி தீர்த்த பவனியும் நுவரெலியா நகரில் இன்று (06) காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது.

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் காயத்ரி பீடத்தில் இந்தியா நர்மதா நதியில் கண்டெடுக்கப்பட்ட 108 பாண லிங்கங்கள் பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை 9.10 மணி முதல் 10.12 மணிவரையான சுப முகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் 108 பாண லிங்கங்களினதும் புனித நதி தீர்த்த ஊர்வலம் கோலாகாலமாக நடைபெறுகிறது.

நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பாரத நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது புனித நதிகளான நர்மதா, சிந்து, யமுனா, சரஸ்வதி, காவேரி, பிரம்மபுத்திரா, கங்கா, கிருஷ்ணா, கோதாவரி, இவைகளுடன் திருவேணி மகா கும்பமேலா தீர்த்தமும் மற்றும் இந்தியா நர்மதா நதியிலிருந்து கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட 108 பாண லிங்கங்கள் ஜேர்மன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த 108 பாண லிங்கங்கள் சுவாமி முருகேசு மகரஷியின் தவத்தின் மூலம் ஜேர்மன் நாட்டில் இருப்பதை தெரிந்துக் கொண்ட பின் அவரின் வேண்டுக்கோலுக் கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆலயத்திற்கு கடந்த 25 வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது.

அந்த 108 பாண லிங்கங்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி காயத்ரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பவுள்ளது.

இதனை முன்னிட்டு லிங்கங்கள் மற்றும் புனித தீர்த்த நீரும் ஊர்வலமாக கண்டி வீதி, பழையகடை வீதி, புதியகடை வீதி, தர்மபால சந்தி, உடபுசல்லாவ வீதி, விசேட பொருளாதார மத்திய நிலையம் வீதி, லேடிமெக்லம் வீதி வழியாக ஊர்வலம் ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடம் சென்றடைந்தது.

கும்பாபிஷேகம் பெருவிழாவை முன்னிட்டு இன்று 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரியா கால நிகழ்வுகள் காலை 5.30 மணிக்கு விநாயகர் வழிப்பாடு புண்ணியாக வாசனம் தேவ பிராமண அனுஞ்ஞை முகூர்த்தப் பத்திரிக்கை வாசித்தலுடன் ஆரம்பமாகியது.

நாளை (07) காலை 7 மணி முதல் விநாயகர் வழிபாடு புண்ணியாகவாசனம்,யாகசாலை பிரவேசம் யாக பூஜை, தீபாராதனை, வேத தோத்திர திருமுறை பாராயணம் என்பன நடைபெறும்.

நாளை மறுதினம் (08) 8 மணி முதல் தைலாப்பியாங்கம் (எண்ணெய் காப்பு சாத்துதல்) இரவு முழுவதுமாக நடைபெறும். நாளை 9 ஆம் திகதி புதன்கிழமை விசேட யாகபூஜை, அடியார்களுக்கு விபூதி பிரசாரம் வழங்கப்படும். குருமார்கள் உபசாரம் நடைபெறும்.

எதிர்வரும் 10 ஆம் திகதி 9.10 மணி முதல் 10.12 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில் தேவர்கள் பூமாரி சொரிய 108 பாண லிங்க மூர்த்திகளுக்கும் திருமஞ்சண குட முழுக்குப் பெருவிழா மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்று பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.