30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நேருவின் பழங்குடியின முதல் மனைவி காலமானார்

இந்திய நாட்டின் முதல் பிரதமரான நேருவின் முதல் பழங்குடியின மனைவி என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட புத்னி மஞ்சியான் தனது 80 ஆவது வயதில் காலமானார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு 1959-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவர்ஹலால் நேரு அணை திறப்பு விழா ஒன்றிற்காக சென்றிருந்தார்.

தாமோதர் பள்ளத்தாக்கு கோர்ப்பரேஷனில் நடந்த நிகழ்ச்சியில் நேருவை வரவேற்பதற்காக 15 வயதான பழங்குடியின பெண் புத்னி மஞ்சியான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

திறப்பு விழாவின் போது நேருவின் வேண்டுகோளின் பேரில் சிறுமி புத்னி மஞ்சியான் அணையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது நேரு புத்னிக்கு மாலை அணிவித்தார். ஆனால் இந்த சம்பவம் புத்னியின் வாழ்க்கையை மாற்றியது.

இந்த சம்பவம் குறித்து விவாதிக்க இரவில் சந்தாளி சமுதாயத்தின் பஞ்சாயத்து கூடியது. மலர்மாலை அணிவிக்கப்பட்டதால் பழங்குடி மரபுகளின் படி புத்னி இப்போது ஜவர்ஹலால் நேருவை திருமணம் செய்து கொண்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் பழங்குடி மரபுகளின் படி புத்னி பழங்குடியினர் அல்லாதவரை திருமணம் செய்ததாக கூறி அவர் சந்தாலி சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கோர்ப்பரேஷன் வேலையில் இருந்தும் 1962-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜார்கண்ட் சென்ற அவர் சுதின் தத்தா என்ற தொழிலாளியை மணந்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தனர்.

இந்நிலையில், 1985-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் புத்னியை பற்றி அறிந்த ராஜீவ்காந்தி அவரை சந்தித்தார். அப்போது புத்னி தனக்கு நேர்ந்த துயரத்தை ராஜீவ் காந்தியிடம் விவரித்தார்.

இதைத்தொடர்ந்து புத்னிக்கு தாமோதர் பள்ளத்தாக்கு கோர்ப்பரேஷனில் மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அதில் பணியாற்றி 2005-ம் ஆண்டு புத்னி ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஞ்சேட் பகுதியில் மகள் ரத்னா வீட்டில் வசித்து வந்த புத்னி கடந்த 17 ஆம் திகதி காலமானார். 80 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது உள்ளூர் பூங்காவில் இருக்கும் நேருவின் சிலைக்கு அருகில் புத்னி மஞ்சியானுக்கு ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அவரது மகளான ரத்னாவுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி பஞ்சேட்டில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு கோர்ப்பரேஷன் தலைமை பொறியாளர் சுமேஷ்குமார் கூறுகையில், நினைவு சின்னம் அல்லது பிற கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles