25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி

பங்களாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) இரவு நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது.

இக் குழுவில் 3 ஆவது வெற்றியை ஈட்டிய தென் ஆபிரிக்கா 6 புள்ளிகளைப் பெற்று பி குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனால், அதன் அரை இறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை.

இங்கிலாந்து அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இங்கிலாந்தும் மேற்கிந்திய தீவுகளும் வெற்றிபெற்றால் 3 அணிகள் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்போது நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப்  பெற்ற  அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி லோரா வுல்வார்ட் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தஸ்மின் ப்ரிட்ஸ் (42), ஆனெக் பொஷ் (25) ஆகிய இருவரும் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

என்றாலும் இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். ஆனால், மாரிஸ்ஆன் கெப் (13 ஆ.இ.), க்ளோ ட்ரையொன் (14 ஆ.இ.) ஆகிய இருவரும் தென் ஆபிரிக்காவுக்கு வெற்றி இலக்கை அடைய உதவினர். பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

ஆரம்ப வீராங்கனை டிலாரா அக்தர் ஓட்டம் பெறாமல் 2ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார். எனினும் ஷாதி ராணி (19), சோபனா மோஸ்தரி (38) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

தொடர்ந்து மோஸ்தரி, அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மோஸ்தரி ஆட்டம் இழந்த பின்னர் சுல்தானாவும் ஷொர்ணா அக்தரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 106 ஓட்டங்களாக உயர்த்தினர்.

சுல்தானா 32 ஓட்டங்களுடனும் ஷொர்ணா அக்தர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப், ஆனெரி டேர்க்சன், நொன்குலுலெக்கோ மிலாபா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles