சமீபத்தில் சிரியாவின் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்துள்ளது. மட்டுமல்லாது ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க ‘ஐயன் டோம்’ அமைப்பை கூடுதலாக வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா எச்சரித்ததை போல, இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது.

நேற்று சுமார் 40 ஏவுகணை வடக்கு இஸ்ரேல் பகுதியில் இந்த அமைப்பு வீசியிருக்கிறது. ஆனால், இஸ்ரேலிடம் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ‘ஐயன் டோம்’ அமைப்பு இருப்பதால், இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரியதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஏவுகணைகள் மட்டுமல்லாது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை கொண்டும் ஹிஸ்புல்லாத தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறது. இதையும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கின் போர் சூழலை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.

முன்னதாக “சிரியாவில் இனி எந்த தாக்குதலும் நடக்காது, அதற்கு நாங்கள் கேரண்டி. ஆனால், இஸ்ரேல் மீதான ஸ்பெஷல் மிலிட்டரி ஆப்ரேஷனை மட்டும் கைவிடுங்கள்” என்று ஈரானிடம் அமெரிக்கா கேட்டிருந்தது. இந்த விஷயம் இஸ்ரேல் காதுக்கு செல்லவே, அதன் பிரதமர் நெதன்யாகு, “சிரியா மீதான தாக்குதல் தொடரும்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அந்த பக்கம் ஈரான், “பாலஸ்தீன மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறினால்தான் எங்கள் தாக்குதல் நிற்கும்” என்று கூறியுள்ளது. அதாவது உலகின் சர்வாதிகாரியா தன்னை காட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை சிறிய நாடுகளான இரண்டும் கேட்க மறுப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.