வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காரணமாக மக்கள் அச்சத்தில் பயணிக்கும் நிலைமை தொடர்கிறது. கொழும்பு – யாழ் புகையிரத தடத்தில் காணப்படும் வவுனியா தாண்டிக்குளம், ஓமந்தை, பாலமோட்டை, புதூர் மற்றும் கொழும்பு மன்னார் புகையிரத தடத்தில் காணப்படும் செட்டிக்குளம், மெனிக்பாம் போன்ற பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் தற்போதும் இவ்வீதிகளினால் பயணித்த பலர் புகையிரதத்துடன் மோதுண்டு பலியாகியுள்ளதுடன், யானைகளும் பெருமளவான கால்நடைகளும், புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்திருந்தன. இவ்வருடம் செட்டிக்குளம் துடரிக்குளத்தில் காணப்பட்ட பாதுகாப்பற்ற புகையிரதகடவையினை கடக்க முற்பட்ட இளைஞன் ஒருவன் புகையிரதத்துடன் மோதுண்டு பலியானதுடன் இவ் உயிரிழப்புக்கு நீதி கோரி புகையிரதத்தினை மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது. இவ்வாறான உயிரிழப்புக்களை தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.