ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப் புப் பிரிவினருக்கான தபால்மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கடந்த இருநாட்களில் நிறைவடைந்திருந்தன.
விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை. முடிந்த இரு நாட்களிலும் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. மூன்றாம் நாளான இன்றைய தினமும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் நேற்று வியாழக்கிழமை (05) தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘‘தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. தபால்மூல வாக்களிப்பு விதிமுறை மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை. அதேபோன்று கண்காணிப்பு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தபால்மூல வாக்களிப்பு இடங்களில் எவ்வித இடையூறும் இடம்பெற்றிருக்காவிட்டாலும் வெளியில் தேர்தல் சட்டவிதி முறை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
பொலன்னறுவையில் 50 கிலோ கிராம் நிறையுடைய சுவரொட்டிகளை கைப்பற்றியிருந் தோம். இதுதொடர்பில் பொலிஸ் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற பிரசாரங்களினால் வேட்பாளர்களுக்கே பாதிப்பு ஏற்படும். அதனால், ஏனைய வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆதரவாளர்கள் செயலாற்றுவது அவசியமாகும். இது தொடர்பான பொதுத் தேர்தல் ஆணைக்குழுவிடம் மாத்திரம் இல்லை. ஸ்ரிக்கர் ஒட்டுதல் போன்ற செயற்பாடுகள் அரச மற்றும் பொது சொத்துகளில் மாத்திரமல்ல, தனியார் உடைமைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் பொறுப்பு சகல பிரஜைகளுக்கும் இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட இந்தத் தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்றே நம்புகிறோம். வேட்பாளர்கள் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் அவர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட காலம் வழங்கப்படுகிறது. அந்தக் காலப்பகுதிக்குள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், தேர்தல் ஆணைக்குழுவினால் அவர்களின் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.
அவர்கள் எவ்வாறு பிரசாரம் செய்தாலும் அவை சட்டரீதியானதாக இருக்கக் கூடாது. உயிரிழந்த வேட்பாளரின் பெயர் வாக்குசீட்டிலிருந்து நீக்கப்படாது என்பதுடன் இறந்தவரின் சார்பில் வேறொருவரின் பெயரை பரிந்துரை செய்யவும் முடியும்’’ என்றார்.