தேர்தல் என்றால் பொதுவாக ஒரு விடயம் மேலெழுவதுண்டு. தமிழ்த் தேசியம் பேசும் ஒவ்வொரு கட்சிகளும் மற்றவர்களை விமர்சிப்பதுண்டு – ஜனநாயக அரசியலில் ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியம்தான். அதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் அவ்வாறான விமர்சனங்கள் நாகரிகமாக இருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் அவ்வாறான நாகரிக வார்த்தைகளை காண்பது மிகவும் குறைவு. இது கடந்த கால அனுபவம்.
இதனால் நன்மையடைவது யார்? நிச்சயமாக எதிர்தரப்புக்கள்தான் நன்மையடைகின்றன. இன்று ஜே.வி.பி அலை தொடர்பில் பேசப்படுகின்றது. ஆயுத கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்னும் நம்பிக்கையில் இரண்டு முறை முயற்சித்து மோசமாக அழித்தொழிக்கப்பட்ட இயக்கம்தான் ஜே.வி.பி. ஆனால் அறுபது வருடங்களுக்கு பின்னரான அரசியல் நிலைமைகளால் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய நிலையை அவர்கள் அடைந்திருக்கின்றனர். ஆட்சியில் இருந்த பிரதான கட்சிகளின் வீழ்ச்சியும் அதேவேளை பிரதான கட்சிகள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பதாலும்தான் ஜே.வி.பியால் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியென்னும் பெயரில் அவர் எழுச்சியுற்றிருக்கின்றனர்.
இந்த எழுச்சி தமிழ் மக்களையும் பாதித்திருப்பதாக பலவாறான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. தமிழ்ச் சூழலில் முன்வைக்கப்பட்ட கணிப்புக்கள் பெரியளவில் வெற்றி பெற்றதில்லை. எனினும் அவ்வாறான பார்வைகளை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்தப் பின்புலத்தில் இந்த ஜே.வி.பி அலை உண்மைதானா என்று ஆராயவேண்டியது அவசியம். தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது அடிப்படையில் தமிழர் அடையாளம். தமிழர் அடையாளத்தை பாதுகாக்க வேண்டுமாயின், அதனை ஒரு தென்னிலங்கை கட்சியின் ஊடாக மேற்கொள்ள முடியாது.
தமிழ் அரசியல் கட்சிகள் மீது – குறிப்பாக அந்தக் கட்சிகளின் காலாவதியாகிப்போன அரசியல்வாதிகள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அவ்வாறானதொரு முடிவை எடுத்தால், அது தமிழ் இன அடையாளத்தை பலவீனப்படுத்தும் தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலுக்கு வழிசமைப்பதாகவே அமையும். ஜே.வி.பி. அலை தொடர்பில் சிந்திப்பவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.
தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்தவேண்டும். மக்களின் அதிருப்தியை புரிந்துகொண்டு அதற்கேற்று செயற்பட வேண்டும். மக்கள் தமிழ்த் தேசிய கட்சிகள் மீது கோபம் கொள்ளுகின்றனர் என்றால் அதன் பொருள், நீங்கள் சரியாக செயற்படவில்லை என்பதுதான். மக்கள் பிரதான அரசியல் தரப்புக்களிலிருந்து விலகிச் செல்வதற்கான அடிப்படையான காரணம் இதுதான்.