புத்தளம் பகுதியில் விபத்து:திருமணமாகி 3 மாதங்களான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
123

புத்தளம்-முந்தல் கீரியங்களி பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய மதுரங்குளி நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான குறித்த இளைஞரும், அவரது மனைவியும் கடந்த 20 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் கொழும்பில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று மீண்டும் தமது வீட்டிற்கு வருகை தந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்ததுடன், முச்சக்கர வண்டியில் பின்பக்கம் இருந்த அவரது மனைவியும், மனைவியின் சகோதரரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். மூன்று வாரங்கள் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.