7 அணிகள் பங்குபற்றும் பெண்களுக்கான ஆசியக்கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-தாய்லாந்து, இந்தியா-இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆசியக் கிண்ண பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004ம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றது. முதல் 4 தொடர் 50 ஓவர்கள் கொண்டதாக நடாத்தப்பட்டது. 2012ம் ஆண்டிலிருந்து இந்தப் போட்டி 20 ஓவர்கள் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டு நடாத்தப்பட்டு வருகிறது. இறுதியாக 2018ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் வங்காளதேஸ அணி கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நடக்கவிருந்த போட்டி இரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில் 8வது ஆசியக் கிண்ண பெண்கள் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சம்பியனான வங்காளதேசம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் வங்காளதேச அணி தாய்லாந்தை எதிர்கொள்கிறது. நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்றில் சம்பியன் பட்டத்தை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியில் கலந்துகொள்கிறது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 முறை நேருக்கு நேர் மோதியதில் 5 தடவைகளும் வங்காளதேச அணியே வெற்றிபெற்றிருந்தது.
மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகும் 2-வது லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான, 6 முறை சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.