‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் அடிப்படையற்றதாகும். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம். அரசியலமைப்பு திருத்தம் எனக் குறிப்பிட்டுக் கொண்டு நாட்டிற்கு பொருத்தமற்றதை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை விமர்சித்து, 20ஆவது திருத்தத்தை ஆதரித்தவர்கள், தற்போது 20ஆவது திருத்தத்தை விமர்சித்து 22ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள். இவர்களின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைபாடுகளை 22ஆவது திருத்தத்தின் ஊடாக திருத்திக் கொள்ள இணக்கம் தெரிவித்தோம். ஆனால் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நாட்டிற்கு எதிரானவற்றை நிறைவேற்ற அவதானம் செலுத்தப்படுகிறது. இதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது. தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் எவ்வித தொடர்புமில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம்’ என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.