பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 19 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை 2025 அக்டோபர் 29 ஆம் திகதிக்கு, தவணை இடப்பட்டுள்ளது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபயணி போராட்டத்தில் கலந்து கொண்ட மல்லாவி வர்த்தகர்கள் , மல்லாவி இளைஞர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு மாங்குளம் நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (06) இடம்பெற்றது
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் இருந்து யாழ்ப்பாணம் மாவட்டம் பொலிகண்டி நோக்கிய பேரணி 2021 பிப்ரவரி 3ஆம் திகதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டது,
குறித்த பேரணி மல்லாவி பகுதியில் வருகை தரும் பொழுது மல்லாவி பகுதியில் உள்ள வர்த்தகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் , இளைஞர்கள் முதலானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த 19 நபர்கள் மீது மல்லாவி பொலிஸாரால் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
குறித்த வழக்கு மாங்குளம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்காளிகள் சார்பாக மல்லாவி பொலிஸாரும் , எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி வீ.எஸ்.எஸ் தனஞ்சயன் அவர்களும் மேலும் மூன்று சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தனர்
குறித்த வழக்கில் “இது ஓர் அமைதியான பேரணி ,பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான குறித்த போராட்டம் தமிழ் தேசிய இனத்தினுடைய அரசியல் உரிமைகளை வெளிப்படுத்தி நடாத்தப்பட்ட மற்றும் அமைதி வழியில் நடைபெற்ற பேரணி .என்று எதிராளிகள் சார்பில் விண்ணப்பத்தினை மன்றுக்கு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்
இதேவேளை போராட்டங்களை ஒருங்கிணைக்க , நடத்த அரசியல் அமைப்பு உறுப்புரை 14 இன் அடிப்படையில் உரிமை காணப்படுகின்றது என்பதனையும் கௌரவ நீதிமன்றிற்கு எதிராளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழாம் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 29.10.2025 அன்றுக்கு தவணை இடப்பட்டுள்ளது .