30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு பலத்த அடி; பாகிஸ்தானிடம் 31 ஓட்டங்களால் தோல்வி

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (03) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 31 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

பாகிஸ்தானின் கடைசி 2 விக்கெட்களை விரைவாக வீழ்த்த முடியாமல் 32 ஓட்டங்களை கடைசி 5 ஓவர்களில் இலங்கை விட்டுக்கொடுத்ததே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் பாகிஸ்தான் அணித் தலைவி பாத்திமா சானா வேகமாகப் பெற்ற 30 ஓட்டங்களும் பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகளும் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 117 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கையின் ஆரம்பம் எந்தவகையிலும் சிறப்பாக அமையவில்லை.சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இலங்கை வீராங்ககைளின் மோசமான அடி தெரிவுகள், பொறுப்பற்ற துடுப்பாட்டம் காரணமாக விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. 

அத்துடன் இலங்கை அணியின் ஒட்ட வேகம் மிகவும் குறைவாக இருந்தது.முன்வரிசையில் இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன மாத்திரமே ஒரளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓட்டங்களைப் பெற்றார்.சமரி அத்தப்பத்து (6), ஹர்ஷிதா சமரவிக்ரம (7), ஹாசினி பெரேரா (8), கவிஷா தில்ஹாரி (3) ஆகியொர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

இதன் காரணமாக 15 ஓவர்கள் நிறைவில் இலங்கை 5 விக்டெக்ளை இழந்து 61 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்று பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் ஏனையவர்களிடமிருந்து போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை.

பந்துவீச்சில் சாடியா இக்பால் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பாத்திமா சானா 10  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஷ்ரா சாந்து 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஒமய்மா சொஹெய்ல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.15 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பாகிஸ்தான், கடைசி 2 விக்கெட்களில் 32 ஓட்டங்களை மேலதிகமாக பெற்று ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

பாகிஸ்தானின் 8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது 6 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணித் தலைவி பாத்திமா சானா அடுத்த 14 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்று 30 ஓட்டங்களுடன் 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அவரைவிட முன்னாள் அணித் தலைவி நிதா தார் 23  ஓட்டங்களையும் ஒமய்மா சொஹெய்ல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் சமரி அத்தபத்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 19  ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உதேஷிகா ப்ரபோதனி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles