அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம், பொதுமக்களின் மரணத்திற்குப் பின்னரே கிடைக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். மக்கள் உயிருடன் இருக்கும் போது அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம் கிடைக்காது. இந்த அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் காரணமாகவே இந்த நாடு பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளதாக அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில் அரசாங்கத்தை கலைத்து ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை நியமித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சி தலைவரிடம் அவர் கோரிக்கையை முன்வைத்தார். தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீக்கி விட்டு, நாட்டின் மீது பற்றுக் கொண்ட, ஜனநாயகத்தை மதிக்கும் புதியவர்கள் பதவி ஏற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரியுள்ளார்.