மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்டசின்ன ஊறணி, வெட்டுக்காடு, ஆகிய பொதுசுகாதார பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள், நோய்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு
பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும், 100 பேருக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும், இதேவேளை முகக்கவசம் இன்றி, முகக்கவசம் முறையாக அணியாமல் வீதியில் சென்ற 21 பேருக்கு எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது இன்று 121 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.