ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பில் சுமூகமான முறையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளீதரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் மேற்பார்வையில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 290 உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 404 உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தபால் மூல வாக்களிப்பு செயற்பாட்டில் மாவட்ட செயலக மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது.