கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிமனைக்கு வழங்கப்பட்ட உடல் வெப்பநிலை அறியும் கருவிகளை பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு வலயக் கல்வியலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
ஏறாவூர், காத்தான்குடி மற்றும் கோறளை மேற்கு ஆகிய கல்விக்கோட்டத்திலுள்ள பதினாறு பாடசாலைகளுக்கு உடல் வெப்பநிலை அறி கருவிகள் கையளிக்கப்பட்டன.
இவ்வலயத்திலுள்ள 78 பாடசாலைகளுக்கும் இக்கருவிகள் தேவையென அறிவிக்கப்பட்டநிலையில் முதற்கட்டமாக மாகாண கல்வித்திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பாடசாலைகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் எஸ்எச். நௌபீக் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தற்போது காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் மாணவர்களது பாதுகாப்புக்கருதி தினமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.