மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அமைந்துள்ள மகிழவெட்டுவான் பாலம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்ததையடுத்து, இரண்டாண்டுகளாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான், நரிப்புதோட்டம், நெல்லூர் மற்றும் கல்குடா பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், தற்போது அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 3,000 குடும்பங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
உடைந்த பாலம் வரை மாத்திரமே பொதுப்போக்குவரத்து பஸ்கள் பயணிக்கின்றன. இதனால், மக்கள் பாலத்தை கடந்து, பின்னர் சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வெய்யிலும், மழையிலும் நடந்து செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்கள் வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை ஊடாக சுமார் 20 கிலோமீற்றர் சுற்றி பயணிக்க வேண்டியுள்ளது. இதேவேளை, 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக பாலமும் வெள்ளத்தால் உடைந்துள்ள நிலையில், அதனூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாததால், அரை நாள் விடுப்பு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாடசாலை முடிந்த பின்னரும் பஸ் கிடைக்காததால், மாற்று போக்குவரத்துக்காக பலர் சைக்கிள்கள் அல்லது நடையாக பயணிக்க வேண்டியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்தும் இருந்தும், இதுவரை எந்தவொரு அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ அல்லது அரச அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையும், தேர்தல் காலங்களில் மட்டும் வாக்கு கேட்டு வந்த அரசியல்வாதிகள் தற்போது பாராமுகமாக இருக்கின்றனர் எனவும் பொதுமக்கள் கடும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனவும், பாலத்தை மீள் நிர்மாணம் செய்யுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.