மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனிமம் அகழ்வு அனுமதி பத்திரங்களை வழங்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கனிமம் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் புவிசரியவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியக மாவட்ட பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘எங்களையும் வாழ விடுங்கள்’ எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுற்றாடல்துறை அமைச்சரான ஹாபிஸ் நசிர் அஹமட்டின் உருவப்பொம்மையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிப்பதற்காக, மாவட்ட அரசாங்க அதிபர், புவிசரியவியல் அளவை மற்றும் சுரங்கங்கள்
பணியகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலக பொறியியலாளர், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அழைப்பு விடுத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புவிசரியவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியக மாவட்ட பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக வருகை தராத நிலையில்,
ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பிய நிலையில், அவ்விடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், புவிசரித்திரவியல் அளவை மற்றும்
சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலக பொறியியலாளர் டெக் சன் ஜயசிங்க, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரின்
பிரத்தியேக செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோர் வருகை தந்தனர்.
தமது போராட்டம் தொடர்பில் எடுத்துக்கூறிய கனிமம் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் தமக்குரிய நீதியைப் பெற்றுத் தருமாறு
கோரிக்கை விடுத்தனர்.
சம்பந்தப்பட்டஅதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு வார காலப் பகுதிக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.