உக்ரைன் தலைநகர் கீவில் கடும் தாக்குதல்களை ரஷ்யா தொடுத்து வருகின்றது. நேற்று திங்கட்கிழமை ரஷ்யா வர்த்தக இலக்குகளை குறிவைத்து நடத்திய தாக்குதல்கள் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் நகரில் இன்று முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நகரத்தின் மேயர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்திவரும் மரியூபோல் நகரில் ரஷ்யா மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்று உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் செலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த நகரத்தின் 90வீதமான கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர், மின்சாரமின்றி 3 இலட்சம் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அறியவருகின்றது.
இதேவேளை, மரியூபோல் மக்கள் சரணடைந்தால் துறைமுகத்தைவிட்டு பாதுகாப்பான பாதையில் செல்லலாம் என்று ரஷ்யா காலக்கெடு விதித்திருந்தது. அதை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.