மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவன் பல ஆண்டுகளுக்கு பின்னர் கைது

0
2

கம்பஹா, பமுனுகம, புபுதுகம பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து, பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த கணவன் பல ஆண்டுகளுக்கு பின்னர் பமுனுகம பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார்  சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபருக்கு எதிராக வத்தளை நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்தெஹிவளை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கணவனே கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.