மருத்துவர் என அறிமுகப்படுத்தி, நிதி மோசடியில் ஈடுபட்டவர் யாழில் கைது!

0
85

போலி ஆவணங்களை காண்பித்து, தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி, கனடாவில் உள்ள ஒருவரிடம், ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழுவினால், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த, 29 வயதான நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிசொகுசு கார், 15 பவுண் நகைகள், 5 இலட்சம் ரூபா பணம், 5 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இவர், தான் ஒரு மருத்துவர் என்பதற்குரிய போலி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் உருவாக்கி, அவற்றை பயன்படுத்தி மோசடிகளை மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சந்தேக நபர், மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது எனவும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் எனவும், தகவல் வெளியிட்டார்.அத்துடன், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், காணி ஒன்று தனக்கு உள்ளதாகவும் தெரிவித்து, அதற்குரிய ஆவணங்களையும் அனுப்பியதுடன், அதை ஒரு கோடியே 42 இலட்சம் ரூபாவுக்கு விலை பேசியுள்ளார்.

அதனை நம்பி, கனடாவில் இருந்து, உண்டியல் மூலமும், வங்கிக் கணக்கு ஊடாகவும், ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா கைமாறப்பட்டுள்ளது.
அதன் பின்னர், சந்தேக நபர் அனுப்பிய காணி ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்து கொண்ட கனடா தரப்பினர், இது தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதையடுத்து, விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சந்தேக நபர், இன்று யாழ்ப்பாண நகரப் பகுதியில் நடமாடுவதை அறிந்து கொண்ட, யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார், கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.சந்தேக நபர், சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அதி சொகுசு காருடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர், கைச்செலவுக்காக வைத்திருந்த ஐந்து இலட்சம் ரூபா பணமும், அவர் அணிவதற்கு வைத்திருந்த 15 பவுண் நகைகளும், 5 கையடக்கத் தொலைபேசிகளும், வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.