மட்டக்களப்பில் மாணவிக்கு ஊசி ஏற்றப்பட்டதாக பரவிய தகவல் போலியானது

0
109

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவருக்கு, பாடசாலை முன்றலில் வைத்து, இனந்தெரியாத நபரொருவரால், ஊசி ஏற்றப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல், போலியானது என எமது செய்திப் பிரிவுக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் நோக்கில், எமது செய்தியாளர் சம்பந்தப்பட்ட தரப்புக்களைத் தொடர்புகொண்டார். சம்பவத்தின் பின்னணி தொடர்பில் தெரிய வருகையில், ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவியொருவர், பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று, தனது பெற்றோரிடம் இனந்தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதாகக் கூறியுள்ளார். பாடசாலை நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்ட மாணவியின் தந்தை, பாடசாலையில் தடுப்பூசி ஏதும் ஏற்றப்பட்டதா? என வினவியுள்ளார். அவ்வாறு ஏதும் ஏற்றப்படவில்லை
என பாடசாலை நிர்வாகத்தினர் பதிலளித்த நிலையில், மாணவி தெரிவித்த விடயங்களை தெரியப்படுத்திய தந்தை, பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள சி.சி.ரிவி.காட்சிகளையும் பரிசோதித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான எவையும் அதில் பதிவாகாத நிலையில், பெற்றோர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மாணவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்,
மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
தனது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில், மாணவி கல்வி பயிலும் தனியார் கல்வி நிலைய ஆசிரியைக்கும், மாணவியின் தந்தை தெரியப்படுத்திய
நிலையில், குறித்த தனியார் கல்வி நிலைய ஆசிரியை, இச்சம்பவம் தொடர்பில் குரல் பதிவொன்றை, வட்ஸப்பில் குழுவில் இணைத்து, பெற்றோர்களை எச்சரித்திருந்தார்.
தனியார் கல்வி நிலைய ஆசிரியையின் குரல் பதிவு, ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பரவிய நிலையில், சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆராயாது, சில தனிப்பட்ட நபர்கள், முகப்புத்தகத்தில் காணொளிகளையும் பதிவிட்டனர். இவ்விடயம், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியிருந்தது.
இவ்விடயத்தின் உண்மைத் தன்மைகள் தொடர்பில், எமது செய்தியாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி க.கலாரஞ்சனியை
தொடர்புகொண்டபோது, வைத்திய பரிசோதனைகளில், மாணவிக்கு ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் தெரியவரவில்லை என்றும், வைத்தியசாலை தொடர்பில் பரப்பப்படும் தகவல்களும் தவறானவை என குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவர்களிடமும் எமது செய்தியாளர் வினவிய வேளை, இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை மட்டத்திலும், வைத்தியசாலை மட்டத்திலும் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் போலியானது என தெரிவித்திருந்தனர். மருத்துவ நடைமுறைகளுக்கமைய மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 29வது விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்தும் சுகதேகியாகவே உள்ளார் என்றும், விரைவில், வீடு திரும்புவார் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர், தமக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்த பின்னர், அவற்றை பகிர்வதே, சமூகப் பொறுப்பு வாய்ந்த
செயலாகும்.