மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் 2 கோடி ரூபா கொள்ளை

0
81

சீதுவ லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா  கொள்ளையடித்த  சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் உட்பட 6 பேரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பேலியகொட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.     

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில், வாகரை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும்,  கொனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவரும்,    கண்டி,  கேகாலை,   தியத்தலாவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த  நான்கு  சந்தேகநபர்களும்   கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு விசேட அதிரடிப்படை சீருடைகள்,  இரண்டு பூட்ஸ் காலணிகள், இரண்டு பெரட்கள், ஹோல்டர்,  கைவிலங்குகள்,  5,129.000 ரூபாய் பெறுமதியான இரண்டு வான்கள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.