முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாதுகாப்பான முறையில் நாட்டுக்கு மீண்டும் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்க வேண்டும் எனவும் பசில் இந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
இது ஜனாதிபதி உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மிக முக்கியமான கோரிக்கையாகும் என பசில் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பலாம் என அவரது நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.