முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (06) இரவு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளையும் அதிலேயே தொழிலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் திங்கட்கிழமை (07) காலை கைது செய்து அவர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று திங்கட்கிழமை (07) இரவு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் மீன்பிடி படகு ஒன்று சுமார் 450 கிலோ மீன்களுடன் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கரைக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் இந்த சட்டவிரோத மீன்பிடி படகை கடற்கரைக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்த மீனவர்களின் பிரதிநிதிகளை தென்பகுதியில் இருந்து முல்லைத்தீவு வருகைதந்து குறித்த சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட மீன்பிடி படகின் உரிமையாளர் தங்களை வீடியோ பதிவு செய்து சென்றதோடு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக நமது முல்லைத்தீவு கடலில் இடம்பெறுகின்ற இந்த சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கடற்தொழில் நீரில் வளத் திணைக்களம் தற்போது இந்த சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு இதை தொடர்ச்சியாக செய்து எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …..