மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி உலகக கிண்ண தகுதிகாண் சுற்றின் கடைசி சுப்பர் 6 போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.
மஹீஷ் தீக்னவின் 4 விக்கெட் குவியல், ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க குவித்த சதம், திமுத் கருணாரட்னவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை சுலபப்படுத்தின.
இதன் மூலம் தாகுதிகாண் சுற்றில முதல் சுற்று மற்றும் சுப்பர் 6 சுற்றில் 7ஆவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டி தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக, ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதியாளர் 1 மற்றும் தகுதியாளர் 2 அணிகளைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியினர் பங்குபற்றவுள்ளதுடன் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் சொந்த நாட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்து இரசிக்கவுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 போட்டியில் தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு துஷான் ஹேமன்தவும் சஹான் ஆராச்சிகேயும் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
சஹான் ஆராச்சிகே இன்றைய போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார்.
மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 244 ஓட்டங்களை வெற்றி இலக்ககாகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 44.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.
பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 190 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், இருவரும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க தனது இரண்டாவது தொடர்ச்சியான சதத்தைக் குவித்து அசத்தினார். 113 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிஸ்ஸன்க 14 பவுண்டறிகளுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.
அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 83 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்று வெற்றி இலக்கை அடைய உதவினர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் மூலம் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கைக்கு எதிராக 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.
மத்திய வரிசை வீரர் கியசி கார்ட்டி பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாகவே மேற்கிந்தியத் தீவுகள் கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. 35ஆவது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகளின் 8ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 155 ஓட்டங்களாக இருந்தது.
இதன் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளையும் 200 ஓட்டங்களுக்குள் இலங்கை கட்டுப்படுத்தும் என கருதப்பட்டது.
ஆனால், கியசி கார்ட்டி, கெவின் சின்கிளயா ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
முன்னதாக கய்ல் மேயர்ஸுடன் 6ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களை கியசி கார்ட்டி பகிர்ந்திருந்தார். அதுவே அணியின் இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
மொத்த எண்ணிக்கை 62 ஓட்டங்களாக இருந்தபோது 6ஆம் இலக்க வீரராக களம் புகுந்த கியசி கார்ட்டி 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 87 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
அவரைவிட ஆரம்ப வீரர் ஜோன்சன் சார்ள்ஸ் (39), பின்வரிசை வீரர்களான ரொமாரியோ ஷெப்பர்ட் (26), கெவின் சின்க்ளயா (25) ஆகிய மூவரே 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
இலங்கையினால் பயன்படுத்தப்பட்ட 6 பந்துவீச்சாளர்களும் குறைந்தது ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அவர்களில் மஹீஷ் தீக்ஷன 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன் துஷான் ஹேமன்த 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் விருதை மஹிஷ் தீக்ஷன பெற்றார்.